உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது. பொருளிலக்கணம் - அகத்திணை பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் ம...