முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது. 

 பொருளிலக்கணம் - அகத்திணை 

பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் முப்பத்திரண்டு வகையிலான பொருள்விளக்கம் உள்ளதாய்ச் ச.வே.சுப்பிரம யன் கூறுகிறார். பொருளானது சொல்லிற்கான பொருளாய்க் கொண்டால் பொருளதிகாரமானது அகராதி இலக்கணமாய் அமைந்துவிடும். பாடுபொருள், உள்ளடக்கம் மட்டுமே பொருள் என்றால் தொல்காப்பியம் அவ்வகையில் பொருளதிகாரத்தை அமைக்கவில்லை எனலாம். வாழ்வின் மெய்ப்பொருள் என்பது சமய நெறிப்பட்டதாய்த் திகழும். பொருளுக்கு இலக்கியம் என்று பொருள் கொள்வது மயக்கத்தைத் தோற்றுவிக்கும். எனவே இலக்கியத்தைப் பாடும் முறை பற்றிக் கூறுவது பொருளிலக்கணம் எனலாம். ச.அகத்தியலிங்கம், “இலக்கியம் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது ஆதலின், தமிழ் இலக்கியம் பற்றிக் கூறும் பகுதியை வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதாகக் கருதுகின்றனர். உண்மையாக நோக்கின் தொல்காப்பியனாரின் நோக்கம் அக்காலத் தமிழ் இலக்கியத்தின் பொருளையும் அமைப்பையும் எடுத்துரைப்பதே என்பது நன்கு விளங்கும்’’1 என்கிறார். இலக்கியத்தை ஆக்கும் முறை பற்றி விளக்குவதே பொருளிலக்கணத்தின் நோக்கம் என்கிறார். பொருளிலக்கணம் என்பதற்கு எழுத்தின் வழியும் சொல்லின் வழியும் நின்று மக்களின் வாழ்வியல் நெறியை இலக்கியமாய் வடிவமைக்கும் முறை பற்றிய இலக்கணம் என்று பொருள் கொள்ளலாம். 

பொருளிலக்கணப் பகுப்பில் தலைமக்களின் காதல் வாழ்வினை அகத்திணை என்றும் அறநெறிப்பட்ட பிற வாழ்வியல் ஒழுக்கங்களைப் புறத்திணை என்று விளக்கிச் செல்கிறது. பொருளினை இரண்டாய்ப் பகுத்தளிக்கும் முறையானது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாக விளங்குகின்றது. வடமொழி முதலான பிற மொழிகளில் இப்பாகுபாடானது காணப்படவில்லை.

இலக்கண வகைமையில் அகத்திணை மரபுகள்

தொல்காப்பியர் அகம், புறம் என்ற இரண்டினையும் பொருளிலக்கணம் என்ற ஒரே தலைப்பின் கீழ் விளக்கியுள்ளமையைப் பின்னெழுந்த இலக்கணங்கள் தனித்தனி இலக்கண வகைகளாகக் கொள்ளலாயினர். இறையனார் அகப்பொருள், அகப்பொருள் விளக்கம், மாறனகப்பொருள் ஆகியன அகத்தைக் குறிக்க எழுந்த நூல்களாகும். பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன புறவிலக்கணத்தைக் குறிக்க எழுந்த நூல்களாகும். மேலும் தொல்காப்பியத்தைத் தொடர்ந்தெழுந்த பிற்கால இலக்க கள் பொருளை அகம், புறம் என்று பகுத்ததோடில்லாமல் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்றும் வகைப்படுத்தலாயினர். 

அகம் ஏழ்வகைத் திணை பாகுபாட்டை உடையதாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்தும் அகன் ஐந்திணை என்று தொல்காப்பியர் சுட்டுகிறார். ஒருதலைக் காமமாய்க் கைக்கிளையும் பொருந்தாக் காமமாய்ப் பெருந்திணையும் விளக்கப்படுகிறது. கைக்கிளையானது சிறப்பில்லா மாந்தர்களுக்கு உரியது என்றும் பருவ வயதினை அடையாத பெண்ணிடம் கொள்ளும் காமம் என்றும் குறிப்பிடப்படுகிறது. கைக்கிளை ஆண்பாற் கைக்கிளை என்றும் பெண்பாற் கைக்கிளை என்றும் பகுத்துரைக்கப்படுகிறது. இக்கருத்து மறுக்கப்பட்டு, கைக்கிளை என்பது தலைவன், தலைவி இவ்விருவரும் ஒருமித்த உணர்வுடன் காதல் கொள்ளும் முன் தலைவன் தன்னுடைய உணர்வினை வெளிப்படுத்தி விட்டுத் தலைவியின் கருத்தினை அறியும் வரை காத்திருக்கும் குறுகிய கால உணர்வு என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அகன் ஐந்திணை முதல், கரு, உரி என்னும் முப்பொருளின் பாற்பட்டு அமைகின்றது. முதற் பொருளுள் நிலமும் பொழுதும் விளக்கப்படுகிறது. அவற்றுள் பாலைக்கான நிலம் குறித்த கருத்தானது இலக்கண ஆசிரியர்களிடம் முரண்பட்டுக் காணப்படுகின்றது. பாலைக்கு நிலம் உண்டு என்றும் பாலையானது குறிஞ்சி, முல்லையின் திரிபு என்றும் பாலைக்கெனத் தனி நிலம் இல்லை என்றும் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பாலையானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களும் திரிவதனால் தோன்றுகிறது. பாலையானது முல்லை, குறிஞ்சி என்னும் இவ்விரு நிலங்கள் திரிவதனால் தோன்றுவதோடுல்லாது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலமும் பகலவனின் ஆதிக்கத்தால் வேனிற் காலத்துப் பாலையாய்த் திரிகின்றன. தொல்காப்பியர் பாலையை நடுவுநிலைத் திணை என்று காரணப் பெயர் கொண்டு குறிப்பிடுகிறார். பாலைக்கான நிலத்தைச் சுட்டாது விடுத்துள்ளார். முதற் பொருள்களுள் பாலைக்குப் பொழுதினை மட்டும் தொல்காப்பியர் கூறியதன் காரணம், இவ்வேனில் காலத்தில் தான் பாலை நிலமானது தோன்றுவதனாலேயாகும். எனவே நிலமில்லா பாலை நிலத்திற்குத் தெய்வம் முதலான பொருள்களைச் சுட்டுதல் ஏற்புடையதில்லை. 

அகத்திணை களவு, கற்பு என்னும் இரு வகையினதாய்ப் பகுக்கப்படுகிறது. அவற்றுள் களவென்பது ஊழ் வினையின் காரணமாய்த் தலைவன் தலைவி இருவரும் ஒத்த அன்பினராதலாகும். எண்வகை மணங்களுள் காந்தர்வ மணமே களவு மணம் என்றும் உரைப்பர். ஆனால் வடமொழி சுட்டும் காந்தர்வமும் தமிழ் இலக்கியங்கள் சுட்டும் களவும் இருவேறு தன்மையிலானவை ஆகும். தமிழ் இலக்கணம் விளக்கும் களவொழுக்கமானது ஒத்த அன்புடைய தலைவி தலைவனிடையே நிகழும் காட்சி, ஐயம், தெளிவு முதலிய ஒழுக்கங்களை அறவழியில் நின்று விளக்குகிறது. களவு குறித்து இளம்பூரணர், 

“களவாவது பிறர்க்குரிய பொருள் மறையிற் கோடல், இன்னதின்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர், தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலைவழாமல் நிற்றலால் இஃது அறமெனப்படும்’’ 

என்பதால் களவொழுக்கமானது அறத்தின்கண்படும் ஒழுக்கமே என்கிறார். 

கற்பென்பது மண நிகழ்வாகும். மண நிகழ்விற்குப் பிறகு தலைவன், தலைவி இடையே நிகழும் ஒழுக்கங்களை எடுத்துரைப்பதாகும். கற்பு குறித்து ஆ.சிவலிங்கனார், 

“கற்பு என்பது கற்றலையும் கற்பித்தலையும் குறிக்கும். எனவே கற்பு என்பது கிழவனும் கிழத்தியும் தாம் கற்றவாறும் பிறர் தமக்குக் கற்பித்தவாறும் ஒழுகும் ஒழுக்கம் ஆகும். தாம் கற்றவாறு ஒழுகலாவது நூலைக் கற்றவாறும் பிறர் வாழ்க்கை கண்டு கற்றவாறும் ஒழுகல். பிறர் கற்பித்தவாறு ஒழுகலாவது கிழவன் கற்பித்தவாறு கிழத்தி ஒழுகலும் இருவரும் தந்தையர் தன்னையர் சான்றோர் முதலியோர் கற்பித்தவாறு ஒழுகலும்’’

என்று விளக்குகிறார். தொல்காப்பியர் இவ்விரு வகைகளுக்கும் களவியல், கற்பியல் என்று தனித்தனி இயல்கள் அமைத்து விளக்கியுரைக்கின்றார். 

பொருளியலும் இக்கருத்துக்களையே எடுத்துரைக்கின்றது. களவிற்குரிய கைகோள்களாக, 

“காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்...’’

என்னும் நால்வகையினைத் தொல்காப்பியம் சுட்டுகிறது. கற்பிற்குரிய கைகோள்களாக, 

“மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலும்...’’

என்பனவற்றை எடுத்துரைக்கிறது தொல்காப்பியம். மேலும் களவுக்குரியோர் கற்பிற்குரியோர் என்று மாந்தர்களைப் பகுத்துரைக்கின்றது. களவிற்குரியோராக தலைவன், தலைவி, தோழி, செவிலி, பார்ப்பன், பாங்கன் ஆகியோர் குறிப்பிடுவர். மேற்கண்ட அறுவரோடு பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் என்னும் பன்னிருவரும் கற்பில் கூற்றிற்குரியோர் ஆவர். மேலும் வாயில்களாகவும் கருத்துக்களை எடுத்து மொழிபவர்களாகவும் கட்டுவிச்சி, தந்தை, தமையன் முதலியோர் காட்டப்படுகின்றனர். களவு, கற்பு இவ்விரண்டிலும் மாந்தர்களுக்கான கூற்றுகள், வாழ்வியல் முறைகள், பண்புகள், இயல்புகள், நெறிமுறைகள் முதலியன சுட்டப்படுகின்றன. அகத்திணை குறித்துத் தொல்காப்பியம் கூறும் வகைப்பாட்டினை அடியொற்றி பிற்கால இலக்கண நூல்கள் அமைந்திருந்தாலும் அகத்துறைகளின் வகைப்பாட்டில் வளர்நிலையைப் பெற்றிலங்குகின்றன. பிற்கால இலக்கண நூல்களுள் நம்பியகப் பொருள், மாறனகப் பொருள், இலக்கண விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் முதலிய நூல்கள் அகத்துறையின் வகைகள் குறித்துச் சிறப்பாக விளக்கிச் செல்கின்றன. தொல்காப்பியர் இல்வாழ்க்கையின் நோக்கமாக, 

 “காமஞ் சான்ற கடைக்கோட் காலை...’’


என்று குறிப்பிடுகிறார். தமிழில் அக இலக்கணம் அகத்திணை மாந்தர்கள் குறித்துப் பாடல் புனையும் போது, அம்மாந்தர்கள் தத்தமக்குரிய நெறிமுறைகள் தவறாது உலகியல் வாழ்வினை மேற்கொள்பவர்களாகப் படைத்தல் வேண்டும் என்றுரைக்கின்றது. 

அகக்கோட்பாடு புனைவு முறைகள் தோன்ற இலக்கியங்கள் அமைக்கும் முறையினை எடுத்தியம்புகிறது. அவ்வகையில் தொல்காப்பியரின் அகக்கோட்பாடானது இலக்கியங்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பற்றிக் கூறுவதோடு பல்வகை இலக்கிய வகைகளுக்கு அடித்தளமாகவும் விளங்குகின்றது. தொல்காப்பியர் கூறியுள்ள அகவிலக்கண வகைகளைப் பிற்கால இலக்கண நூல்கள் விரித்துரைக்கின்றன. மேலும் இலக்கணம் மட்டுமல்லாது இலக்கியங்களிலும் இந்நிலையைக் காணலாம். உலா, பிள்ளைத் தமிழ், அந்தாதி, கோவை முதலியன பிற்கால இலக்கியத்தில் தனியொரு புதிய இலக்கிய வகையாய்த் தோற்றம் பெறலாயின. அவ்வகையில் பெரும்பான்மையான சிற்றிலக்கியங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக அகப்பொருட் செய்திகள் அமைந்துள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம...

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காத...