முன்னுரை :
'தமிழன் என்றொரு இனமுண்டுதனியே அவனுக்கொரு குணமுண்டு'
என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
அகத்திணை :
நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காதல் கொண்டு மௌனங்களால் கவிபொழிந்து இன்பம் நுகர்ந்து இல்லறம் அறிந்து நல்லறத்தோடு வாழும் வாழ்வியலைக் குறிக்கும்.
தலைவனும் தலைவியும் ஒத்த அன்பினால் மலரும் காதல் வாழ்க்கையே அகவாழ்க்கை ஆகும். இந்த அகவாழ்க்கையிiனையே அகத்திணை என்கிறோம். அகத்திணை என்னும் சொல்லைப் பிரித்தால் (அகம் - தலைவனும் தலைவியும் ஒருமித்த மனஉணர்வால் காதல் கொள்ளுதல், திணை – ஒழுக்கம்) பார்த்தீர்களா தமிழனின் பண்பாட்டை காதல் செய்வதற்கும் ஒழுக்கம் என்னும் நன்னடத்தை தவறாமையை மானமாகக் கொண்டுள்ளான்.
அகத்திணை பாகுப்பாடு :
தரணியெங்கும் ஆழும் வல்லமைமிக்க தமிழர்களின் இலக்கியங்கள் அனைத்திற்கும் வரையறை வகுத்துள்ளது. அதனை இலக்கணம் எனலாம். தமிழில் மிகவும் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் மொழிசார்ந்த எழுத்து, சொல் பற்றியும் மனித வாழ்வியல் சார்ந்த பொருள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதில் மனிதரின் அகவாழ்வை ஏழாக வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்...
'கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுவாய்முற்படக் கிளந்த எழுதிணை என்ப' – தொல்.அக.1.
என்னும் நூற்பாவில் கைக்கிளை, பெருந்திணை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஏழும் அகத்திணையின் பாகுபாடுகள் ஆகும். அன்பின் ஐந்திணை :
அகத்திணையானது கைக்கிளை, பெருந்திணை உட்பட ஏழு வகைகளைக் கொண்டிருந்தாலும் ஒழுக்க நிலைகளில் ஐந்து திணைகள் மட்டுமே.'அவற்றுள்
நடுவண் ஐந்திணை, நடுவணது ஒழிய
படுதிரை வையம் பாத்தியபண்பே' – தொல். அக. 2.
என்னும் நூற்பாவை ஆராய்கையில் கைக்கிளை, பெருந்திணை ஒழிய ஐந்தும் அன்பின் ஐந்திணை என்ற சிறப்பினை பெற்றுள்ளதை அறியலாம். காரணம் கைக்கிளை என்பது ஒருதலைக் காதலையும் பெருந்திணை என்பது பொருந்தாக் காதலையும் குறிக்கும் எனவே இவை தமிழ் பண்பாட்டிற்கு ஏற்றவை அல்ல என்பதால் இவை தவிர்த்த மற்ற ஐந்தையும் ஒழுக்கத்தின் கோட்பாடுகளாகக் கொண்டார்கள். தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் காதலே அகத்திணையாகும். அவர்களின் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு திணையோடு தொடர்புடையதாக அமையும். தலைவனும் தலைவியும் காதல் கொண்டு புணர்வதை குறிஞ்சியும், ஊடல் கொண்டிருப்பதை மருதமும், பொருளீட்டவோ அல்லது வினைமேற் சென்ற தலைவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவி இரங்கல் கொள்வதை நெய்தலும் விளக்கும். மேற்சொன்ன நிகழ்வுகள் அந்தந்த திணையின் ஒழுக்கமாக கருதப்படுகிறது.
களவியல் கூறும் காதல் :
பண்டையத் தமிழரின் காதல் வாழ்க்கையை களவு, கற்பு என இரண்டாக வகைப்படுத்தியுள்ளார்கள். அவற்றில் களவு என்பது மனதால் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் காதலே களவு ஆகும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களும் களவியல் பற்றியே அதிகம் பேசுகின்றன. களவு என்னும் பண்பானது தலைவன் தலைவி மற்றும் தோழன் தோழி இவர்களைத் தவிர மற்றவர் அறியார் என்னும் ஒழுக்க நிலையைக் கொண்டுள்ளது.
தலைவன் தலைவி மேற்கொள்ளும் களவு வாழ்க்கையை குடும்பத்தினர் குற்றமாகக் கருதினாலும் சமூகத்தினர் பிழையாகக் கருதவில்லை. களவியலில் தலைவனும் தலைவியும் சந்திக்கும் நிகழ்வு மிகவும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். தலைவன் தன் தலைவியின் அழகை வர்ணிக்கும் விதங்கள் கற்பனை வளங்களை காட்சிப்படுத்தும்.
கற்பு வாழ்க்கை :
கற்பு நிலை என்பது அகவாழ்வின் மற்றொரு பிரிவு ஆகும். தலைவன் மற்றும் தலைவியின் திருமண வாழ்க்கையினைக் கூறுவதே கற்புவாழ்க்கை ஆகும். களவு வாழ்வில் ஈடுபட்டுள்ள ஆணும் பெண்ணும் வெகுகாலங்கள் களவு வாழ்க்கையைத் தொடரமுடியாது. ஏனெனில் இவர்களது களவு செய்திகள் ஊர் மக்களிடையே அலராகப் பரவத் தொடங்கிவிடும். இதனால் விரைந்து மணம் முடித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். தலைவியை பெண் வீட்டார் மறுக்கும் தருவாயில் தலைவன் மடலேறுதலில் ஈடுபடுவான்.
பின்பு பெற்றோரால் இக்காதல் வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு திருமண ஏற்பாடு நடைபெறும். ஒருமித்த மனதுடன் காதல் புரிந்த இருவரும் திருமணம் செய்து கொண்டு இணைந்துவிடுவர். பெற்றோர் இருவரையும் பிரிக்க முயன்றால் தலைவனும் தலைவியும் இணைந்து யாருக்கும் தெரியாமல் உடன்போக்கை மேற்கொள்வார்கள்.
திருமணம் தோன்றுதல் :
களவு வாழ்வில் ஈடுபடும் தலைவனும் தலைவியும் எதிர்காலத்தில் கைவிடாமல் இருக்கவும் எவ்வித இடர்பாடுகளும் நேராமல் இருக்கவும் பலரின் முன்னிலையில் இருமணம் இணைந்து திருமணம் என்று நடத்தினார்கள் இதனை
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப' – தொல். கற்.4.
என்னும் நூற்பாவில் திருமணம் குறித்து தொல்காப்பியர் கூறியதை காணலாம். இதிலிருந்து மனிதர்கள் மேற்கொள்ளும் களவு வாழ்க்கையானது அதன் ஒழுக்கநெறி தவறாமல் கற்பு நிலையை அடையும் என்பதை அறியமுடிகிறது. இதனையே நம் சங்க இலக்கியங்களும் அகப்பொருள் நூல்களும் கூறுகின்றன.
முடிவுரை
அகத்திணையானது மனித வாழ்வில் அன்பையும், இன்பத்தையும் தரவல்லது. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் இப்படிதான் வாழவேண்டும் என்று அகத்திணை, களவு, கற்பு என ஒவ்வொன்றிற்கும் இலக்கணம் வகுத்தவன் நம் தமிழன் என்பது பெருமைக்குரியதாகும். ஒழுக்க நிலையுடன் மேற்கொள்ளப்படும் காதலானது கற்பியல் நிலையைப் பெற்று காவியமாக மலரும். காதல் காப்பியங்களை படிக்கமட்டுமல்ல படைக்கவும் செய்ய வைக்கும் என்பதே அகத்திணை வாயிலாக நான் அறிந்து கொண்ட உண்மையாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக