கருவறையின் இருளகற்றிக் கதிராய் வந்தாய்!
கண்மணியே எனதாதித் தேவதை நீயே!
உருவாகும் என்சுவாச வேருன் பாலே!
உயிர்ப்பெற்றுத் தழைக்கின்ற விழுது நானே!
ஒருநூறு கவிதையினை யாத்துப் பார்த்தேன்!
உன்னன்பின் துளிசொல்ல மொழியு மில்லை!
பருவங்கள் கடந்தாலும் இதயம் தங்கும்!
பத்துமாதச் சுமையல்ல வாழ்நாள் காப்பாய்!
விழும்போது உனக்கன்றோ வலித்து நின்றது!
வெல்லும்போது உனக்கன்றோ இனித்து நின்றது!
அழுங்காப்புப் புவியென்னைத் தள்ளும் போது
அணைப்பொன்றே இமயத்தின் துணிவைத் தந்தது!
ஊட்டியது வெறும்சோறாய் இருந்த தில்லை!
உயிரூட்டும் நம்பிக்கைப் பாலாய் நின்றது!
காட்டியது வெறும்நீதி கதையு மில்லை!
கண்டெடுத்த வாழ்வியலின் சார மன்றோ!
எவ்விடமும் இறையிருக்க இயலா தென்றே
ஈன்றவளைப் படைத்தானென் றுரைப்பார் மண்ணில்!
செவ்விதழ்நீ இருப்பதனால் கடவு ளுக்கே
சிறப்புமிக்கப் பெருமையென நானே சொல்வேன்!
அவ்விடையை உலகுணரச் செய்த தாயே!
அடிபணிந்து நன்றியினை நவில்கின் றேனே!
எவ்வுயிரும் எனைவியக்கச் செய்தாய் நீயே!
என்னுயிரில் வரைந்திட்ட ஓவியம் நீயே!
~ தனேசு பாலகிருட்டிணன் @தினகரன்
கருத்துகள்
கருத்துரையிடுக