ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவத்தில், "வகுப்பறையில் நடக்கும் எல்லாவற்றையும் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிரலாமா?" என்ற கேள்வி எனக்கு அடிக்கடி எழுகிறது. ஆரம்பத்தில், இந்த யோசனை எந்தத் தீங்கும் விளைவிக்காது என்று தோன்றியது. மகிழ்ச்சியான தருணங்கள், படைப்புச் செயல்பாடுகளும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் தருணங்களைப் பதிவு செய்வது கற்றலைச் சிறப்பித்து, கொண்டாட ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், நவீன கல்வியின் சிக்கலான தன்மைகளை நான் புரிந்துகொண்டபோது, இந்தப் பழக்கம் சில முக்கியமான நெறிமுறை சிக்கல்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்தேன். இது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
ஆசிரியரா அல்லது உள்ளடக்க உருவாக்குநரா?
ஒரு காலத்தில், பாடங்களைப் பதிவு செய்வதிலும், மாணவர்கள் திட்டங்களில் முழுமையாக மூழ்கியிருக்கும் படங்களை எடுப்பதிலும், அவர்களின் உற்சாகமான பதில்களைப் பதிவு செய்வதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், இஃது ஒரு பழக்கமாக மாறியபோது, என்னுடைய பாத்திரம் என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது - நான் இன்னும் ஓர் ஆசிரியராகத்தான் இருக்கிறேனா அல்லது என்னையும் அறியாமல் ஒரு முழுநேர உள்ளடக்க உருவாக்குநராக மாறிவிட்டேனா? நினைவுகளைப் பாதுகாக்க விரும்புவது இயல்பான ஒன்றுதான். ஆனால், வகுப்பறையில் நடக்கும் ஒவ்வொரு தருணத்தையும் சமூக ஊடக உள்ளடக்கமாக மாற்றுவது, கல்வியில் இருந்து கவனத்தை விலக்கி, வெளிப்பாட்டுத் தன்மைக்கு (visibility) முக்கியத்துவம் அளிக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
மாணவர்கள் மீது ஏற்படும் தாக்கம்
ஒரு நாள், குழுச் செயல்பாட்டின் போது, ஒரு மாணவி பங்கேற்கத் தயங்கினாள். அவளிடம் விசாரித்தபோது, “என்னைப் பதிவு செய்ய வேண்டாம். எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொன்னாள். அப்போது எனக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டது - நான் வகுப்பறையைத் திறமைகளை வளர்க்கும் இடமாகக் கண்டேன். ஆனால், சில மாணவர்கள் அதைத் தாங்கள் விருப்பமின்றித் தள்ளப்பட்ட ஒரு மேடையாக உணர்ந்தனர்.
ஒவ்வொரு குழந்தையும் வெளிச்சத்தின் கீழ் செழிப்படைவதில்லை. சிலர் விமர்சனத்திற்கு அஞ்சுகிறார்கள். மற்றவர்கள் தன்னம்பிக்கைக் குறைபாட்டால் போராடுகிறார்கள். தொடர்ந்து பதிவு செய்வதன் மூலம், அவர்களின் நலனுக்கு நாம் உண்மையாகவே முன்னுரிமை அளிக்கிறோமா அல்லது அவர்களின் சங்கடங்களை நாம் புறக்கணிக்கும் ஒரு சூழலை உருவாக்குகிறோமா?
ஊக்கத்திற்கும் சுரண்டலுக்கும் இடையிலான கோடு
நல்ல தருணங்களைப் பகிர்வதன் மூலம் மற்றவர்களை ஊக்கப்படுத்தலாம். ஆனால், “யாருக்காக நாம் பதிவு செய்கிறோம்?” என்ற கேள்வியைக் கேட்பது முக்கியம். கற்றலை மேம்படுத்துவதற்கும், மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்கும், புதுமையான கற்பித்தல் முறைகளை ஊக்குவிப்பதற்கும் நோக்கம் இருந்தால், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பகிர்வது அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட அங்கீகாரம், தன் புகழ் அல்லது வெளி உலகத்தின் பாராட்டு ஆகியவற்றுக்கு நோக்கம் சாய்ந்தால், அந்தப் பழக்கம் தவறான வழியில் செல்லக்கூடும். ஒரு கல்வியாளரின் நெறிமுறைக் கண்ணோட்டம் எப்போதும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை நோக்கியே இருக்க வேண்டும்.
பொறுப்பான பகிர்வுக்கு ஓர் அழைப்பு
நிறைய சிந்தனைக்குப் பிறகு, நான் என்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டேன். இன்று, ‘பதிவு செய்’ (record) என்ற பொத்தானை அழுத்துவதற்கு முன்பு, சில கேள்விகளை நான் என்னிடமே கேட்டுக்கொள்கிறேன்:
✅ இது கல்விக்கு மதிப்பு சேர்க்கிறதா?
✅ மாணவர்கள் மனப்பூர்வமாக ஒப்புதல் அளித்து, அவர்கள் வசதியாக உணர்கிறார்களா?
✅ நான் அவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கிறேனா?
இத்தகைய எல்லைகளை வகுப்பதன் மூலம், கற்றலைக் கொண்டாடுவதற்கும், என் மாணவர்களின் உணர்ச்சியும் சமூக நலனைப் பாதுகாப்பதற்கும் இடையே நான் ஒரு சமநிலையைக் கண்டேன். ஆசிரியர்கள் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும் - நாம் வெறும் பாடங்களை மட்டும் கற்பிப்பதில்லை, மதிப்பீடுகளையும் புகட்டுகிறோம். வகுப்பறை என்பது வளர்ச்சிக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருக்க வேண்டும், பதிவு செய்யப்படும் ஒவ்வொரு தருணத்தையும் ஒளிபரப்பும் இடமாக இருக்கக் கூடாது.
முடிவுரை
கற்பித்தல் என்பது ஒரு கலை, அது ஒரு காட்சிப் பொருள் (spectacle) அல்ல. தொழில்நுட்பம் நம்மை ஆவணப்படுத்தவும், பகிரவும் அனுமதிக்கிறது. ஆனால், நாம் விவேகத்துடன் செயல்பட வேண்டும். ஒரு கல்வியாளரின் பொறுப்பு, பாடங்களைக் கற்பிப்பதற்கு அப்பால் நீள்கிறது - மாணவர்கள் பாதுகாப்பாக, மதிக்கப்பட்டவர்களாக, மற்றும் மதிப்பு மிக்கவர்களாக உணர்வதை உறுதி செய்வதும் இதில் அடங்கும். கேமராவை எடுப்பதற்கு முன், நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்: நாம் மாணவர்களை உண்மையாகவே மேம்படுத்துகிறோமா அல்லது அவர்களின் கற்றல் அனுபவங்களை ஒரு பொழுதுபோக்காக மாற்றிவிட்டோமா? ஒருவேளை, வகுப்பறையில் உள்ள சிறந்த தருணங்கள், பார்வையாளர்களின் திரைகளில் தெரிவதற்குப் பதிலாக, மாணவர்களின் இதயங்களில் பாதுகாக்கப்படும் தருணங்களாகவே இருக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக