முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுகதை 2: கோபம் தணியவில்லையா???


2004 ஆண்டு நடந்த ஆழி பேரலையின் BBC செய்தியை பார்த்தப்பின் என் மனதை உருத்தியக் காட்சியினைக் கதையாக்கம் செய்து நான் பேரவைக் கதைக்கு எழுதியச் சிறுகதையாகும். கருத்துகள் இருப்பின் கதையின் இறுதியில் தட்டச்சுச் செய்யவும். நன்றி

“அம்மா.... அம்மா ... இந்த அவலையின் நிலைமையைப் பார்த்தாயாமா. என்னை வளர்த்த தாயே, என்னை பெற்றெடுத்த தாயைக் கூட நான் பார்த்ததில்லை”.

“உன்னையே பார்த்து பார்த்து வளர்ந்தேன்.... உன்னையே நம்பி வாழ்ந்தேன்; வாழ்றேன். அடுத்த வார உன் பேத்திக்கு அதான் நம்ம பொன்னுதாயிக்கு கல்யாணம்”. கம்பீரமா சொன்ன சொக்கலிங்கம் கடலையே வெறித்து பார்க்கிறான்.

“தாயே உன்கிட்ட சொல்லமா நான் யாருக்கிட்டம்மா போய் பொலம்புவேன். ஒன்னதான் தாயீ நான் நம்பிக்கிட்டு இருக்கேன்”.

“மாமா... மாமா... இந்த மனுசன் எங்கதான் போய் தொலைந்தாருன்னே தெரியலையே?”

“இந்த மனுசனுக்குப் பைத்தியம் ஏதோ புடிச்சிருச்சா இந்த நேரத்துல கடலை பார்த்து ஒக்காத்திருக்காரு”. மறுபடியும் குருவம்மா “யோ... மனுசா அங்க அப்படி என்னத்தேயா பார்த்துக்கிட்டு இருக்க, வாயா என் கையாலே ஒனக்கு பிடிக்கும்னே வஞ்சனை மீன் கறிக் குழம்பு வைச்சிருக்கேன் வந்து ஒரு கை பிடியா”.

சொக்கலிங்கமோ காதில் எதுவும் கேட்காதவாறு அப்படியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

குருவம்மா அப்படியே சொக்கலிங்கத்தின் காலை பிடித்துக் கொண்டவாறு “என்னத்தேயா இன்னும் யோசிக்கிறே... வாயா ஒனக்காக ஒன்னொட மவளோ சாப்பிட மாட்டேன்றா, வந்து சாப்பிடுய்யா”.

கொஞ்ச நேரம் குருவம்மாவும் அமைதி சாதித்தாள். மீண்டும் கூப்பிட்டாள் “யோ என்னாயா ஆச்சு இப்ப இப்படி இடி விழுந்த மாதிரி உட்காத்திருக்கே... வாயா வந்து சாப்பிட்டு யோசியா”..

வெகுட்டென எழுந்து “அடிச் செருப்பாலே... நீ ஒண்னுடி வந்து சாப்பிடுன்னு... போடி ஒன்னொட வேலையைப் பார்த்துட்டு”...

குருவம்மா வாயை பொத்திக்கொண்டு எழுந்து நடக்கலானாள். “அடியே செல்லம்... இங்க வாடியம்மா, என்னடி மாமே மேல கோவமா... மன்னிசிரிடீ.. நான் நம்ம பொண்னு கல்யாணத்தை பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன் அந்த நேரம் பார்த்து... நீயும்..... குருவம்மா கண்ணீர் வடிக்கலாயினாள்.

“சரிடா கண்ணா... மன்னிச்சிரிடா”.. குருவம்மாவும் “பரவாலேங்க... நீங்கதானே”.

“என்னடா நம்ம பண்றது சேர்த்து வைச்ச காசு எல்லாம் முடிஞ்சிருச்சு. கையிலே சல்லிக் காசு இல்ல. அதான் ............. நம்ம வளர்த்த தாயிக்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்”.

குருவம்மா மௌளனத்தோடு சொக்கலிங்கத்தைப் பார்த்தாள். “சரிங்க எனக்கு புரிதுங்க... நம்ம கடலம்மா கைவிட மாட்டாங்க” என சில வார்த்தை ஆறுதலாக சொக்கலிங்கத்திற்குக் கூறினாலும் இவ மனசுல எண்ண அலைகள் கடல் அலையை விட அதி வேகமாக அடிக்க ஆரம்பித்தது.

“சரி..... சரி போய் சாப்பாடு போடு வரேன் இப்ப. அடியே.. குருவம்மா சாப்பிட்டாலா?”

“அட...... நல்ல மனுசே நீ, அவ என்னிக்கு ஒன்ன விட்டுட்டு சாப்பிட்டிருக்கா, வாயா நாளியாவதுல” சொல்லிவிட்டு குருவம்மா உணவு பரிமாறினாள்.
என்னதான் சமதானப்படுத்தினாலும் சொக்கலிங்கம் மனசோ கல்யாணத்தைப் பற்றிதான். இறுதியாக முடிவெடுத்தான்.

“குருவம்மா...... "

அடி செவட்டு புள்ளே... இங்க வாடியம்மா... மாமா பக்கத்துல்ல ஒக்காரூடி” கொஞ்சலாக குருவம்மா கையைப் பிடித்து இழுத்து பக்கத்தில் உட்கார வைத்தான்.

“அட... பாரேன் கிழட்டுக்கு இளம் வயசு திரும்புது” வெட்கி தலைக் குனிந்தாள்.
“இல்லே... நாளைக்கு நான் கடலுக்குப் போறேண்டி, நம்ம தாயீ என்னை கூப்பிடுற. அங்கே போனா அவே நமக்கு ஏதாவது வழி காட்டுவான்னு நம்புறேண்டி” குருவம்மா கைகளைப் பிடித்து கெஞ்சிச் கேட்டான்.

அரைமனதோடு அவளும் தலையை ஆட்டி தன் சம்மதத்தைக் கொடுத்தாள்.
“பொன்னுதாயி... புது பொண்ணு... அட வெட்கத்தைப் பாரு. பாருடீ... எப்படி வெட்கப் படுறன்னு. நீயுன் தான் இருக்கீயே”

“அம்மா பொன்னுதாயி... அப்பா நாளைக்கு கடலுக்குப் போயிட்டு வறேண்டியம்மா. வீட்டுல ஒங்க அம்மாவுக்கு ஒத்தாசிய இருடீயம்மா. அநாவசியமா வெளியே ஒத்த ஆளா போகாதே. இப்பக்கூட அப்பா உன் கல்யானத்துக்காக தான் கடலுக்கு போறேண்டாம்மா”

“அப்பா இப்ப என்ன அவசரம் உங்களுக்கு நாளைக்கு ஒண்ணும் நீங்க கடலுக்குப் போக வேண்டாம். பாருங்கம்மா?” கண்ணைக் கசக்கினாள்.

“அடியே குருவம்மா பாரு நம்ம பொண்ணு எவ்வளவு அழகா அழுகிறான்னு.....” சொல்லி வாய்விட்டுச் சிரித்தான் சொக்கலிங்கம்.

“அட..... என் அசட்டு பிள்ளே, என்னடா பேசுற? நம்ம தாயி உன் கல்யாணத்துக்கு அவளாளே முடிஞ்ச சீர் செய்யணுமா, அதான் என்னை கூப்பிடுறா..” பொன்னுதாயைச் சமதானப்படுத்தினான் சொக்கலிங்கம்.

பொன்னுதாய் மனதில் ஒரு சஞ்சலத்தோடு படுத்துறங்கினாள். வழக்கம் போல் கடலுக்குப் போவதற்கு ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கடலுக்கு சென்றான். குருவம்மாவும் பொன்னுதாயும் கையில் மண்ணெண்ணேய் விளக்கை ஏந்தி கொண்டு கடலுக்கு வழியனுப்பினர். எப்போதும் வல...வலன்னு பேசும் குருவம்மா அன்று மௌனம் சாதித்தாள்.

வழியனுப்பிய பின் குருவம்மாவும் பொன்னுதாயும் அவரவர் காலைகடன்களை செவ்வன செய்தனர். அதன் பின் இருவரும் சமயலறைக்குச் சென்று உணவு தயார்ப்படுத்தினர். என்னவோ தெரியவில்லை என்றுமே இல்லாத ஒரு மனவுணர்வு இருவருக்கும். ஊரே மயான அமைதியாக இருந்தது.

காலை மணி 8.30 இருக்கும் யாரும் எதிர்ப்பாராத ஒரு நிலநடுக்கம். சிறுவர் முதல் முதியோர்கள் வரை அலறும் சத்தம். வெளியே ஏறிட்டுப் பார்த்தாள்...... அடப்பாவியம்மா வாடீ வெளியே சொல்லிக் கொண்டு பொன்னுதாயின் கையைப்பிடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தாள் குருவம்மா. இதுவரை யாரும் பார்த்திராத ஒரு பேரலை. குருவம்மா பொன்னுதாயை மேட்டுப் பகுதிக்கு வந்து விட்டு பெருமூச்சு விட்டாள். திரும்பி பார்த்தாள். எங்கு பார்த்தாலும் பிணங்கள் நீரில் மிதக்கின்றனர். ஆனால் குருவம்மா மனதில் ஒரு உறுத்தல்.

திடுக்கென எழுந்து கடலைப் பார்த்து “அடியே... நம்ம மோசம் போயிட்டேண்டி, உங்கப்பா கடலுக்குப் போயிருக்காரு. ஐயோ... நான் என்ன செய்வேன். யாராவது காப்பாதுங்க! காப்பாதுங்க! காப்பாதுங்க!” அழுது புரண்டாள் குருவம்மா.

வானொலி ஆறின் முக்கியச் செய்திகள் :-
மலேசியா நாட்டு மீனவ மக்களுக்கு ஒரு துயரச் செய்தி மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் மீன் பிடிக்கச் சென்ற அனைத்து கப்பலும் கடலில் மூழ்கின. இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை”.

குருவம்மா அதிர்ச்சியில் “மாமா...... என்னை விட்டு போய்டீங்களே."

"அடியே பொன்னுதாயி நீ அப்பவே சொன்ன போகாதீங்கன்னு ஆனா இப்ப உங்கப்பா நம்ம எல்லாம் விட்டு............” சொல்லி முடிப்பதற்குள் அவள் உயிர் அவர்விட்டுப் பிரிந்தது.
பொன்னுதாய் அதிர்ச்சியில் மூழ்கினாள். கடலையே வெறித்துப் பார்த்தாள்.

“என்னடீ... கடல் தாயே என் கல்யாணத்துக்காக கடலுக்குப் போன என் அப்பாவை உன்னோடு எடுத்துக்கிட்ட, இப்ப எங்க அம்மா. அப்புறம் யாரடீ வேணும் உனக்கு சொல்லு.....”

இன்னும் எத்தனை உயிர்கள் வேணுமடி உனக்கு, வா என்னை எடுத்துக்கிட்டு உன் கோபத்தை தனிச்சிக்கோ. இன்னும் உன் கோபம் தனியவில்லையா.............”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் ம...

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம...

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காத...