இதோ பாருங்கள், இன்று தமிழோடு வந்திருக்கிறது ஐபோன்!
ஆப்பிள் நிறுவனம் இன்று தனது புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது; அவற்றுடன் நமது தாய்மொழியான தமிழும் தொழில்நுட்பத்தில் அரியணை ஏறியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஐ.ஓ.எஸ் 7' (iOS 7) இயக்க முறைமையில் (Operating System) தமிழ் மொழி அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இதுவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சாதனங்களில், 'செல்லினம்' போன்ற செயலிகளைத் (Apps) தரவிறக்கம் செய்து, நிறுவிய பிறகே தமிழைப் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு கைபேசிக்கான அடிப்படை இயக்க முறைமையிலேயே தமிழ் எழுத்துருவும், தமிழ் உள்ளீடு செய்வதற்கான விசைப்பலகையும் (Keyboard) இயல்பாகவே ஒருங்கிணைத்து வழங்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல், ஐபோன் 4, ஐபேட் மற்றும் ஐபேட் மினி பயனர்கள் இந்த புதிய இயக்க முறைமையைத் தரவிறக்கம் செய்து, நேரடியாகத் தமிழைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையின் பின்னணியில் இருப்பவர் திரு. முத்து நெடுமாறன் அவர்கள். ஆப்பிள் நிறுவனம் பொதுவாக மூன்றாம் தரப்பு மென்பொருள்களைத் தங்களது அடிப்படை இயக்க முறைமையில் எளிதில் அனுமதிக்காது. இருப்பினும், திரு. முத்து நெடுமாறன் அவர்களின் அயராத முயற்சியால், அவரது 'செல்லினம்' விசைப்பலகை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இயக்க முறைமையோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அவரது இந்தத் தமிழ்த் தொண்டினைப் போற்றிப் பாராட்டுவோம்!
ஐபோனில் தமிழ் தடம் பதித்திருக்கும் இந்த வரலாற்றுச் செய்தி வெளியாகும் இன்றைய நாள் (செப்டம்பர் 11), நமது மகாகவி பாரதியாரின் நினைவு நாளாகவும் அமைந்திருப்பது வியப்பளிக்கிறது.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று முழங்கிய, காலத்தை வென்ற அந்த மகாகவி இன்று மட்டும் நம்மிடையே வாழ்ந்திருந்தால்... தொழில்நுட்பத்தில் தமிழ் அடைந்திருக்கும் இந்த உச்சத்தைக் கண்டு, "இதுவன்றோ யுகப் புரட்சி!" என்று நிமிர்ந்த நெஞ்சோடும், நேர்கொண்ட பார்வையோடும் மீசை முறுக்கிப் பாடியிருப்பார் அல்லவா?
நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது!

கருத்துகள்
கருத்துரையிடுக