இன்று, சாங்கி சிறையின் ஏழாம் எண் செல்லில், ஒற்றைக் காகிதமும் ஒரு பேனாவும் சுந்தரேசனின் முன்னே கிடந்தன. நாளை அதிகாலை அவனது மரண தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது. அதிகாரப்பூர்வமாக அது அவனது 'கடைசி விருப்பக் கடிதம்' (Death Row Letter).
மலேசிய எல்லையிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது, அவனது பையில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறு போதைப்பொருள் பொட்டலம் அவனது வறுமையின் விலையாக இருந்தது. அவனது தங்கையின் திருமணக் கடனும், தாயின் மருத்துவச் செலவும் அவனை அந்தப் பாதையில் தள்ளியிருந்தன. சட்டத்தின் தராசு மனிதர்களின் வறுமையை அளப்பதில்லை; அது எடையை மட்டுமே பார்க்கிறது.
பேரா கிராமத்தின் அந்தச் சிறிய கூரை வீட்டில், வள்ளியம்மா வெறும் தரையில் சுருண்டு கிடந்தாள்.
ஒவ்வொரு நொடியும் சுவரில் இருக்கும் கடிகாரத்தின் 'டிக் டிக்' சப்தம், அவளது நெஞ்சில் இடி போல இறங்கியது. "இன்னும் ஐந்து மணிநேரம்... இன்னும் மூன்று மணிநேரம்..." என்ற எண்ணம் அவளது இதயத்தை அறுத்தது.
ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி என்பது உயிரைக் கொடுத்து உயிரை உருவாக்கும் உன்னதமான வலி. ஆனால், தான் பெற்றெடுத்த மகனின் கழுத்தில் கயிறு ஏறப்போகிறது என்பதை எண்ணித் துடிக்கும் இந்த வலி... அது பிரசவ வலியை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது! அவளால் மூச்சுக்கூட விட முடியவில்லை.
அவள் தன் காய்த்த கரங்களால் தரையை நகங்களால் கீறினாள். "ஐயா... என் மகனுக்கு ஒரு பொது மன்னிப்பு கொடுத்துடக் கூடாதா? அவனுக்கு உலகத்தைப் பத்தி எதுவும் தெரியாதய்யா... தெரியாமப் பண்ணிட்டான். அவனை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்ட வேண்டாம்... ஆயுசு முழுக்கச் ஜெயில்லேயே போட்டு வைங்கய்யா... அவன் ஏதோ ஒரு மூலையில உயிரோட இருக்கான்னு நினைச்சு நான் என் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு போறேன்..." என்று காற்றில் கை கூப்பி கதறினாள்.
வாசல் கதவு தட்டப்படும் ஒவ்வொரு சப்தத்திற்கும் அவளது இதயம் நின்று நின்று துடித்தது. "யாராவது ஓடிவந்து 'சுந்தரேசனுக்கு மன்னிப்பு கிடைச்சிருச்சு'ன்னு சொல்லிட மாட்டாங்களா?" என்ற ஏக்கம் அவளது கண்களைக் குருடாக்கும் அளவுக்கு உறுத்தியது.
தூக்குத் தண்டனைக்கு முந்தைய இரவில், மலேசிய தூதரகத்தின் சிறப்பு அனுமதியோடு, எல்லையைக் கடந்து வந்திருந்த ஒரு சிறிய தூக்குப்போச்சியில் (Tiffin Carrier) அவனுக்கான உணவு சிறைக்காவலரால் உள்ளே வைக்கப்பட்டது.
அது... வள்ளியம்மா தன் நடுங்கும் கரங்களால், கண்ணீரைப் பிசைந்து சமைத்து அனுப்பிய சோறும், வத்தல் குழம்பும்.
தூக்குப்போச்சியின் மூடியைத் திறந்த கணமே, அந்தச் சிறிய செல் முழுக்க அவனது தாயின் கைகளின் வாசனை பரவியது. சுந்தரேசனின் உடம்பு அப்படியே உறைந்துபோனது.
அவன் தன் நடுக்கமுற்ற விரல்களால் அந்தச் சோற்றைத் தொட்டான். முதல் பிடி சோற்றை அள்ளி வாயில் வைத்தபோது, அவனது தொண்டை அடைத்துக் கொண்டது. உணவுக் குழாய் சுருங்கி, அந்தச் சோறு உள்ளே இறங்க மறுத்தது.
"அம்மா..." அவனது நெஞ்சுக்குள்ளிருந்து ஒரு கொடூரமான அலறல் வெடித்தது.
சிறு வயதில் அம்மா, தான் பட்டினியாக இருந்தாலும் 'இந்தாடா என் ராசா' என்று ஊட்டிவிட்ட அதே வத்தல் குழம்பு சோறு! அன்று அந்தச் சோற்றில் அன்பு இனித்தது. இன்று... அதே சோற்றில் மரணத்தின் கசப்பும், தாயின் வாததையும் நிறைந்திருந்தது.
ஒவ்வொரு பருக்கையும் அவனது தொண்டையைக் கடக்கும்போதும், ஆயிரம் முள்கள் ஒரே நேரத்தில் குத்துவது போல இருந்தது. அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள், தட்டிலிருந்த சோற்றின் மீது சொட்டுச் சொட்டாக விழுந்தன.
"அம்மா... நீ அன்பால் வளர்த்த இந்த உடலைத்தானே நாளைக் காலை ஒரு கயிறு பிடுங்கி எறியப்போகிறது? உன்னுடைய உழைப்பை, உன் அன்பை இப்படி ஒரு தூக்குக் கயிற்றுக்கு இரையாக்கிவிட்டேனே அம்மா..."
அவன் தட்டிலிருந்த சோற்றை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு சுவரில் தலை சாய்த்து வீரிட்டு அழுதான். தட்டைக் தூரத் தள்ள மனமில்லாமல், தன் தாயைக் கட்டிப்பிடிப்பது போல அந்த உணவுக் கலசத்தைத் தன் நெஞ்சோடு இறுக்கமாகக் கட்டிக் கொண்டு விக்கி விக்கி அழுதான்.
சிறிது நேரத்திற்குப் பின், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியபடி, நடுக்கத்துடன் அந்த ஒற்றைக் காகிதத்தில் எழுதத் தொடங்கினான்:
"அம்மா...நீ சமைத்து அனுப்பிய சோறு என் வயிற்றுக்குள் போகவில்லை அம்மா... என் நெஞ்சைக் கிழிக்கிறது.நான் உனக்கு மகனாகப் பிறந்ததற்கு பதிலாக, ஒரு கல்லாகப் பிறந்திருக்கலாம். நீ என்மீது ஊற்றிய அன்பின் துளிகளுக்கு நான் கொடுத்த கூலி இந்தத் தூக்குக் கயிறு.தங்கை சுகந்தியிடம் சொல், அவள் அண்ணன் ஒரு குற்றவாளிதான். ஆனால், அவள் அண்ணனின் நெஞ்சில் துரோகமோ, பிறர் வாழ்வை அழிக்கும் நோக்கமோ ஒருபோதும் இருந்ததில்லை அறியாமையும், அவசரத் தேவையும் என்னை நரகத்தின் வாசலில் கொண்டுவந்து சேர்த்துவிட்டன.அம்மா, நாளை என் உயிர் பிரியும் கணத்தில், என் தொண்டையை இறுக்கும் கயிறு உனக்கு வலிக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் நான் இறைவனிடம் வேண்டுகிறேன். என்னைச் சாங்கியின் ஏதேனும் ஒரு மூளையில் புதைத்துவிடுங்கள். நான் மண்ணோடு மண்ணாகக் கரைந்துபோகிறேன்."
அவனது கண்ணீர்த்துளி அந்தக் காகிதத்தில் விழுந்து, "அம்மா" என்ற சொல்லின் மை படர்ந்தது.
நள்ளிரவு தாண்டியது. சிறையின் எஃகு கதவுகள் திறக்கும் சப்தம் எதிரொலித்தது. காவலர்கள் உள்ளே வரும் முன், அந்தச் செல்லின் மூளையில் இருந்த ஒற்றை மின்விளக்கின் வெளிச்சத்தில், சுவரில் படர்ந்திருந்த அவனது நிழல் மெல்ல அசைந்து அவனிடம் பேசத் தொடங்கியது:
"சுந்தரேசா... நாம் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.
உலகம் உன்னைக் குற்றவாளி என்று முத்திரையிட்டுவிட்டது. சட்டம் உனக்கான தண்டனையை எழுதிவிட்டது. ஆனால் எனக்குத் தெரியும்... உன் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த அறியாமையும், குடும்பத்தைக் காப்பாற்றத் துடித்த அந்த அவசரமும்தான் உன்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியதே தவிர, நீ பிறவிக் குற்றவாளி அல்ல என்று.
கவலைப்படாதே... தூக்குமேடைக் கூண்டு வரை நான் உன்னோடுதான் வருவேன். அந்தக் கறுப்புத் துணி உன் முகத்தை மூடும்போதும், கயிறு உன் கழுத்தை இறுக்கும்போதும் நான் உன்னோடுதான் இருப்பேன்.
வா... தைரியமாக நட. இந்த உலகத்தின் தண்டனையை முடித்துவிட்டு, நாம் இருவரும் அமைதியின் நிலத்திற்குச் செல்வோம்..."
சுந்தரேசனின் முகத்தில் இருந்த பயம் முற்றிலும் அகன்றது. அவனது உதடுகளில் ஒரு லேசான புன்னகை அரும்பியது.
சாங்கி சிறையின் மரண அறையில் அதிகாலை ஆறு மணி அடித்தது.
சிறை அதிகாரியின் கை நெம்புகோலை இழுத்தது. பாதங்களுக்குக் கீழே இருந்த மரப்பலகை விலக, சுந்தரேசனின் உடல் ஈர்ப்பு விசைக்கு இரையானது. சொரசொரப்பான அந்தச் சணல் கயிறு அவனது கழுத்தை நெரித்து, விநாடிகளில் அவனது மூச்சை நிறுத்தியது. அவனோடு சேர்ந்து அவனது நிழலும் அந்த இருளுக்குள் முற்றிலும் கரைந்துபோனது.
அதே ஆறாவது மணித்துளி,
மலேசியாவின் பேராக் கிராமத்துச் சிறிய கூரை வீட்டில், "என் ராசா..." என்ற வள்ளியம்மாவின் ஓலம் பாதியில் முறிந்தது. அவளது நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று பலமாக உடைந்து சிதறியது. கைகள் மார்பைப் பலமாகப் பிடித்துக்கொள்ள, அவளது இதயத் துடிப்பு சட்டென்று நின்றுபோனது. தாயின் கருப்பையில் எந்த உயிர் உருவானதோ, அந்த உயிரின் கடைசி மூச்சு அடங்கிய அதே கணத்தில், தாயின் உயிரும் பிரிந்தது.
சட்டம் தன் கடமையைச் செவ்வனே செய்து முடித்துவிட்டதாகப் பதிவேடுகள் மூடி முத்திரையிடப்பட்டன.
மறுநாள் காலை, சாங்கி சிறைச்சாலை வழக்கம்போல இயங்கத் தொடங்கியது. ஆனால், அந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி, கடலின் இரு கரைகளிலும் அலைகளைப் போல மாறுபட்ட உணர்வுகளை எழுப்பியது.
சிங்கப்பூரின் தெருக்களில், மக்கள் தங்கள் அன்றாட வேலைகளில் மூழ்கியிருந்தனர். அங்கே சட்டத்தின் இறுக்கம் அமைதியைத் தந்திருந்தது. "இத்தனை கடுமையான தண்டனைகள் இருப்பதால் தான் நம் பிள்ளைகள் போதைப்பொருளின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்ற குரல் அந்தச் சமூகத்தின் குரலாக ஒலித்தது. ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் காக்க, சட்டத்தின் தராசு தன் முள்ளை உறுதியோடு நிறுத்தியிருந்தது. ஒரு தனிநபரின் முடிவு, சமூகத்தின் பெரும் பாதுகாப்பு அரணாக மாறியிருந்தது.
ஆனால், மலேசியாவின் பேரா கிராமத்தில், அந்தச் சிறிய கூரை வீட்டின் வாசலில் இரண்டு பிணங்கள் அடுத்தடுத்துக் கிடந்தன.
சுற்றிலும் கூடியிருந்த கிராமத்து மக்கள் அமைதியாக அஞ்சலி செலுத்தினர். வறுமையும் அறியாமையும் ஓர் இளைஞனை வழிதவறச் செய்ததும், அந்தத் தவறுக்காக அவனது முழு குடும்பமும் உயிரை விலையாகக் கொடுத்ததும் அவர்களைப் பேரமைதியில் ஆழ்த்தியது. "போதைப்பொருள் என்ற நஞ்சு ஒருவனை மட்டுமல்ல, அவனைச் சார்ந்த மனிதர்களையும், அவனது சந்ததியையுமே ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்" என்ற கசப்பான உண்மை, அங்கே திரண்டிருந்த ஒவ்வொரு இளைஞனின் மனதிலும் ஆழமாகப் பதிந்தது.
சுந்தரேசனின் கதை வெறும் ஒரு குற்றவாளியின் கதையாக முடிந்துவிடவில்லை. அது ஒருபுறம் சமூகப் பாதுகாப்பிற்கான சட்டத்தின் தயவற்ற வலிமையையும், மறுபுறம் வறுமையில் விளையும் குற்றங்களின் கொடூரமான முடிவையும் உலகிற்கு உணர்த்தியபடி, காலத்தின் பக்கங்களில் ஓர் எச்சரிக்கைக் கதையாக நிலைத்து நின்றது.
எழுத்தாக்கம்,
எழுத்தாளர் பா.தனேசு
கருத்துகள்
கருத்துரையிடுக