மலேசியாவில் வாடகை வீடு தேடும் ஒரு சராசரி இந்தியரின் மனதில் உறைந்து கிடக்கும் மிகப்பெரிய காயம், ‘No Indian’ அல்லது ‘Muslims / Chinese Only’ என்ற ஒற்றை வாசகம். ஒருவரின் தகுதி, பின்புலம், கல்வி அல்லது கண்ணியம் எதுவுமே பரிசீலிக்கப்படாமல், வெறும் பெயரையும் தோலின் நிறத்தையும் வைத்து கதவுகள் முகத்தில் அறைந்து மூடப்படும்போது ஏற்படும் அவமானம் சொற்களுக்கு அப்பாற்பட்டது.
ஆனால், அதே காய அனுபவத்தைப் பெற்ற ஒரு நபர், ஒரு வீட்டு உரிமையாளரின் (Property Owner/Host) இருக்கையில் போய் அமரும்போது காணும் மறுபக்கம், இந்த விவாதத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் செல்கிறது. இனப்பாகுபாடு என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டுமே அணுகப்பட்டு வந்த ஒரு சிக்கலுக்கு, ‘சமூகப் பொறுப்புணர்வு’ மற்றும் ‘வாடிக்கையாளர் நேர்மை’ (Consumer Ethics) என்ற இரு கண்களைத் திறந்து வைத்திருக்கிறது இந்தக் கட்டுரை.
1. பாகுபாடு நியாயமல்ல; ஆனால் பயம் உண்மையாதா?
‘Architects of Diversity’ அமைப்பின் 2026 தரவு சுட்டிக்காட்டுவது போல, 31.7% விளம்பரங்களில் இந்தியர்களுக்கு நேரடி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல். "இந்தியர்கள் வீட்டைப் பராமரிக்க மாட்டார்கள்" என்ற பொதுமைப்படுத்தல் (Stereotyping) முற்றிலும் தவறானது.
இருப்பினும், ஒரு தனிநபராகத் தனது சொத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இருக்கும் உரிமையாளரின் பதற்றத்தை நாம் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது. போலிப் பெயர்களில் முன்பதிவு செய்வது, விதிகளை மீறி நாய் வளர்ப்பது, மது விருந்துகள் வைத்து அண்டை வீட்டாருக்கு இடையூறு விளைவிப்பது, சொத்துகளைச் சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழும்போது, ஒரு உரிமையாளருக்கு அது ‘இனப் பிரச்சனை’யாகத் தெரிவதில்லை; மாறாக ‘நிதி மற்றும் நிம்மதி சார்ந்த பாதுகாப்பு அச்சமாக’ (Financial & Operational Risk) மாறுகிறது.
2. "I Paid You" – பணம் எல்லாவற்றையும் வாங்கிவிடாது
இன்றைய வாடிக்கையாளர் கலாச்சாரத்தில் ஊடுருவியிருக்கும் மிக மோசமான மனப்போக்கு: "நான் பணம் கொடுத்துவிட்டேன், எனவே நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்பதுதான்.
வாடகை செலுத்துவது என்பது ஒரு இடத்தைப் தற்காலிகமாகப் பயன்படுத்தும் உரிமையை மட்டுமே தருகிறதே தவிர, அந்த வீட்டின் மீதோ அல்லது அதன் விதிகளின் மீதோ ஆதிக்கம் செலுத்தும் உரிமையை அல்ல. அண்டை வீட்டாரின் நிம்மதி, வீட்டின் சுகாதாரம், அடுத்ததாக வரவிருக்கும் விருந்தினரின் உரிமை என அனைத்தையும் மதிப்பதுதான் ஒரு நாகரிகச் சமூகத்தின் அடையாளம். இந்த அடிப்படைப் புரிதல் இல்லாத சிலரின் நடத்தை, ஒட்டுமொத்தச் சமூகத்தின் மீதும் தவறான பிம்பத்தை உருவாக்க ஏதுவாகிவிடுகிறது.
3. பாகுபாட்டிற்கு நாமே எரியூட்டியாக மாறக்கூடாது
நாம் சந்திக்கும் பாகுபாடுகளை எதிர்த்துக் குரல் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நம்மிடம் இருக்கும் குறைகளைச் சுயபரிசோதனை (Introspection) செய்து திருத்திக் கொள்வதும் முக்கியம்.
- விதிகளை நேர்மையாகப் பின்பற்றுவது,
- முன்பதிவின் போது உண்மையான தகவல்களை வழங்குவது,
- மற்றவர் சொத்தைச் சொந்தச் சொத்து போல் பேணுவது,
போன்ற அன்றாட நடத்தைகளே நமக்கான மரியாதையைச் சமூகத்தில் உருவாக்குகின்றன. சட்டங்களோ அல்லது சமூக ஊடக விவாதங்களோ மட்டும் ஒரு இனத்திற்கான மரியாதையை உடனடியாகப் பெற்றுத் தந்துவிட முடியாது. நம் மக்களின் கூட்டுப் பொறுப்புணர்வால் (Collective Responsibility) மட்டுமே அதைச் சாதிக்க முடியும்.
நிறைவாக...
எல்லா இந்தியர்களும் தவறான வாடகைதாரர்கள் அல்ல; அதேபோல எல்லா வீட்டு உரிமையாளர்களும் இனவாதிகள் அல்ல.
தேவைப்படுவதெல்லாம் மிக எளிமையான இரண்டு விஷயங்கள்தான்:
- உரிமையாளர்களுக்கு: சிலரின் தவறுகளுக்காக ஒரு முழுச் சமூகத்தின் மீதும் முத்திரை குத்தாமல், ஒவ்வொரு தனிநபரின் தகுதியையும் நேர்மையையும் பார்த்து முடிவெடுக்கும் விசாலமான மனம்.
- விருந்தினர்களுக்கு/வாடகைதாரர்களுக்கு: வாங்கிய சாவி வீட்டின் கதவை மட்டுமன்றி, உரிமையாளரின் நம்பிக்கையையும் திறக்கிறது என்பதை உணர்ந்து நடக்கும் பொறுப்புணர்வு.
முன்னேறிய ஒரு சமூகமாக மலேசியாவில் நாம் தடம் பதிக்க விரும்பினால், பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதோடு நின்றுவிடாமல், அந்தப் பாகுபாட்டிற்கு முகமூடியாக இருக்கும் நம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் குறைகளையும் களையத் துணிய வேண்டும். அந்த வகையில், இந்த கட்டுரை ஒரு நேர்மையான சுயபரிசோதனைக்கான தொடக்கம்!
எழுத்தாக்கம்,
எழுத்தாளர் பா.தனேசு
கருத்துகள்
கருத்துரையிடுக