நீண்ட நாட்களாக என் சிந்தனையின் ஆழத்தில் உறங்கிக் கிடந்த எழுத்துகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, தூசிப் படிந்தப் பக்கங்களைத் தட்டிச் சுத்தம் செய்து, என் வலைப்பதிவில் பதிவேற்றத் தொடங்கியிருக்கிறேன்
முதலாவதாக, புத்தகத் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடங்கி, என் சிந்தனைக்கு வடிவம் கொடுத்து மீண்டும் என்னை எழுத ஊக்கப்படுத்திய மண்ணின் மைந்தன், என் அருமை நண்பன் தயாஜி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் .
நாவல் போட்டியில் என்னைச் பங்கேற்கச் செய்து, என் கற்பனைச் சிறகுகளுக்கு வீச்சு கொடுத்த தீப்பொறியின் மகளுமாகிய சகோதரி பொன் கோகிலம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
"இனி எழுதவே வேண்டாம்" என்று நான் ஒதுங்கி நிற்க நினைத்த ஏமாற்றத்தின் தருணங்களில், அவ்வப்போது தன் அன்பான வார்த்தைகளால் எனக்கு ஊக்கமளித்து, என்னை மீண்டும் எழுதத் தூண்டிய முனைவர் இராஜேஷ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் . ஆயிரங்கள் ஆயிரம் பேசுபவர்கள் பேசினாலும், அதையெல்லாம் தாண்டி என்னை மீண்டும் பேனா பிடிக்க வைத்தவர் அவர் .
எந்தவொரு இலக்கணக் கட்டமைப்பிலும் என்னைச் சிறைப்படுத்தாமல், சுதந்திரமாக என் எண்ணங்களை எழுதத் தூண்டி, சரியான வழிகாட்டுதலோடு ஊக்குவித்த மதிப்பிற்குரிய ஐயா கரன் கார்கி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினையும் மரியாதையையும் சமர்ப்பிக்கின்றேன் .
இவர்களோடு சேர்த்து, என் வாழ்வில் அவ்வப்போது நான் சோர்ந்து துவழும் போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தி, தோள் கொடுத்துத் தூக்கிப்பிடிக்கும் ஓர் உன்னத உறவான எனதருமைத் தம்பி தர்வின் இராஜ் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும் . வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு என் வாழ்க்கையின் தூணாக நிற்பவர் அவர்.
என் எழுத்துப் பயணத்தின் இந்த மறு தொடக்கத்திற்கு வெளிச்சமாய் அமைந்த இந்த நல் இதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குகிறேன் .
உங்கள் அனைவரின் அன்போடும் வழிகாட்டுதலோடும் என் எழுத்துப் பயணம் இனிதே தொடரும்!
எழுத்தாளர் பா.தனேசு

கருத்துகள்
கருத்துரையிடுக